நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதல்வர் ஆனார்.
அதேநேரம் ஆட்சியில் இருந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது.
தோல்வியால் அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில் அதிரடி திருப்பமாக 80 பேரில் 58 எம்எல்ஏக்கள் தனி குழுவாக பிரிந்துள்ளனர். இந்த குழுவுக்கு எம்எல்ஏ ரிதப்ரதா பானர்ஜி தலைமை ஏற்றுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் ரிதப்ரதா நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர் 58 எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டியுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர், 58 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் உள்ள ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலக சாவியைப் பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா பானர்ஜி, "எங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பிளக்கும் நோக்கம் எதுவும் இல்லை. மம்தா பானர்ஜி தான் இப்போதும் தங்களின் தலைவராக நீடிக்கிறார்.
நாங்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடியின் கீழ் தான் பணியாற்றுவோம். மம்தா பானர்ஜி தொடர்ந்து எங்களை வழிநடத்தி, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மம்தா பானர்ஜி மீது விசுவாசம் இருந்தாலும், கட்சிக்குள் இருக்கும் தனிநபர் ஆதிக்க ஆட்சிக்கு எதிராகவே எங்களது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மம்தா பானர்ஜியின் மருமகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது ரிதப்ரதா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சட்டப்பேரவைக் கட்சி விவகாரங்களில் அபிஷேக் பானர்ஜி போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளததாக குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த தேர்தலில் பபானிபூரில் நின்ற மம்தா தொலைவியுற்ற நிலையில் யாரை எதிர்கட்சித் தலைவர் ஆக்கலாம் என்பதில் இழுபறி நீடித்தது.
முன்னதாக, அபிஷேக் பானர்ஜி தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை சபாநாயகர் நிராகரித்தார்.
அந்தப் பரிந்துரைக் கடிதத்தில் இருந்த எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகள் போலியானவை என்ற புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.