மேற்கு வங்கத்தில் தேவாலயம் ஒன்றின் திறப்பு விழாவின்போது கும்பல் ஒன்று உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பசந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணதலாவில் தேவாலயம் ஒன்றின் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
திறப்பு விழாவிற்காக ஆயர் சுப்ரதா சக்ரவர்த்தி, பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் கூடியிருந்தபோது, 30 முதல் 35 பேர் கொண்ட கும்பல் ஒன்று தேவாலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
ஆயர் உட்பட பல பாதிரியார்களையும் பக்தர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. பக்தர்களில் இருந்த பெண்களையும் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த வளையல்களைக் கழட்டுமாறு அந்த கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.
மேலும் தேவாலயத்தில் இருந்த சிலுவையை உடைத்த கும்பல் சம்பவத்தைத் தங்கள் கைபேசிகளில் படம்பிடிக்க முயன்றவர்களின் கைபேசிகளையும் உடைத்தனர்.
அந்த இடத்தில் இனி எந்த மத நடவடிக்கைகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் மிரட்டியதாக தேவாலய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தினரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள கிறிஸ்தவ அமைப்பான பாங்கிய கிறிஸ்டியா பரிஷேபா தாக்குதலை கண்டித்துள்ளது.
அரசாங்கம் இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தைரியத்தை அளித்துள்ளது. அவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தேவாலயப் பாதிரியார்களை தாக்கும் அளவிற்குச் சென்றுள்ளனர் என அக்குழு சாட்டியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள், ஒரு கும்பல் தங்களை தாக்கி, கிறிஸ்தவ மதத்தைத் துறக்குமாறு கட்டாயப்படுத்தியதாக கூறி காவல்துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.