மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அம்மாநில திரிணாமுல் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இரு தரப்பும் ஒருவர் மீதொருவர் நம்பிக்கை அற்று இருப்பதால் இதை சிறப்பு வழக்காக கருதி வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்ய மாவட்ட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று முன் தினம் வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை வாக்காளர்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் சிறைபிடித்து வைத்திருந்துள்ளனர்.
இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களின் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசை சாடிய உச்சநீதிமன்றம், அதிகாரிகள் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டது.
இந்த சூழலில் மக்கள் போராட்டத்தை வழிநடத்தி நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்ததில் முக்கிய பங்கு வகித்ததாக ஓவைசி உடைய ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த தலைவர் மொஃபக்கேருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் மொஃபக்கேருல் இஸ்லாம், 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இத்தாஹர் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.
இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர் நிலத்தை விட்டு வெளியேற முயன்றபோது பாக்டோக்ரா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.