மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் ஹூக்ளி பகுதி எம்பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டநிலையில், இன்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதலா காவல் நிலையம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பாக, கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சண்டிதலா காவல் நிலையத்திற்கு வெளியே பேரணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த பாஜக ஆதரவாளர்களுக்கும், டிஎம்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எம்பி கல்யாண் பானர்ஜியை பின்புறமிருந்து தலையில் தாக்கியுள்ளனர். இதில் அவர் கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.