இந்தியா

மேற்கு வங்கம்: முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 23 அன்று 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 29 அன்று மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வடைந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மற்றும் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 3.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.89 கோடி பேர் ஆண்கள், 1.75 கோடி பேர் பெண்கள் ஆவார்.