திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மொய்த்ரா கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவு நிறைவேற்ற அறிக்கையை ஆக.28ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணாநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துளசி மாலை மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து மொய்த்ரா பேசிய சில கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மேற்கு வங்கத்தின் கூர்னி பகுதியைச் சேர்ந்த 6 பெண்கள் மற்றும் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய ஆயுதப் படை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, மஹுவா மொய்த்ராவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பாக கூறி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மஹுவா மொய்த்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஆனால், நீதிமன்றம் முதலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.