இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம், ரேஜிநகரில் வாக்குப்பதிவு தீவிரம்- 19,000 பேர் வாக்களிக்க முடியாத சூழல்!

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியைத் துறந்ததால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நந்திகிராம், ரேஜிநகரில் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சுமார் 19,000 வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தின் நகோன் மக்களவை தொகுதி மற்றும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நகோன் மக்களவை தொகுதி

அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) ஆகிய மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே கடும் முக்கோணப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்தோலோய், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதால் இந்த இடைத்தேர்தல் அவசியமானது. சிறுபான்மையினர் அதிகம் வாழும் இத்தொகுதியில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸும், தொகுதியை முதன்முறையாகக் கைப்பற்ற பாஜகவும், மீண்டும் தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்த AIUDF கட்சியும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

தமிழ்நாடு-புதுச்சேரியில் தேர்தல் நிலவரம்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் தமிழக வெற்றி கழகம், எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் இத்தேர்தல் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதலமைச்சர் என்.ரங்கசாமி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு ஆளும் என்.டி.ஏ கூட்டணி, காங்கிரஸ் மற்றும் திமுக இடையே மூன்று முனை போட்டி நிலவுகிறது.

நந்திகிராம், ரேஜிநகர் தொகுதிகள்

மேற்குவங்க மாநிலத்தில் புகழ்பெற்ற நந்திகிராம் மற்றும் ரேஜிநகர் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியைத் துறந்ததால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நந்திகிராம் காவல் நிலைய அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சுமார் 19,000 வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை

இன்று மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

SCROLL FOR NEXT