இந்தியா

பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்- அஜித் தோவல்

கடல்சார் சவால்களை எதிர்கொள்வதிலும் நாம் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தி உள்ளோம்.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு பிம்ஸ்டெக் ஆகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் 5-வது கூட்டம் டெல்லியில் நடந்தது.

கூட்டத்துக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:-

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் நமது நாடுகள் அனைத்திற்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதமான 170 கோடி மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

வங்காள விரிகுடா நம்மை இணைக்கிறது. இது வெறும் புவியியல் ரீதியான இணைப்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகாலப் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிணைப்புகளால் உருவான ஆழமான நாகரிக மற்றும் கலாச்சார மரபுகளாலும் இணைக்கப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், கடல்சார் சவால்களை எதிர்கொள்வதிலும் நாம் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தி உள்ளோம்.

புதிய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்.

பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு வசதி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய பிம்ஸ்டெக் அமைப்பின் நீண்டகால இலக்குகள் நமது கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.