ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் போட்டியிடும் நிறுவனங்களை வரவேற்பதாக தெரிவித்ததை அடுத்து, இந்தியாவை அதிவேக இணையத்துடன் இணைக்க தயாராக இருப்பதாக ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் வசதியுடன் இணைய சேவையை வழங்குவதற்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
இந்தியாவில் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக ஸ்டார்லிங்க் இணைய சேவை ஒப்புதலுக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் இணைய சேவையை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி தடையாக உள்ளதாக எலான் மஸ்க் சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த ரிலையன்ஸ் நிறுவனம், தாங்கள் ஒருபோதும் போட்டிக்கு அஞ்சியதில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதற்கான உண்மையான சோதனையாக அதை பார்ப்பதாகவும் தெரிவித்தது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோவை இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது எந்த வாடிக்கையாளர்களும் இல்லாமல் நுழைந்ததாகவும்,
ஆனால் தற்போது, ஜியோ 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று உலகின் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மிகவும் மலிவான விலையில் டேட்டாவை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் ஜியோ உட்பட ஒவ்வொரு போட்டியாளரும் நாட்டின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் தெரிவித்த கருத்திற்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்முறை ஆபரேட்டர்களுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
மேலும் இந்திய நெட்வொர்க் சேவையை கருத்தில் கொண்டு பிரத்யேகமாகவும், பாதுகாப்பாகவும் சேவை வழங்குவதற்காக அரசாங்க ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.
ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவிலேயே பிரத்யேக அமைப்புகள், கேட்வேகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் அதிவேக இணைய சேவையை வழங்க தயாராக உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.