இந்தியா

நாங்க VIP-க்கள்.. கியூல நிக்க முடியாது; ‘ஃப்ரீ IPL டிக்கெட் கேட்கும் எம்எல்ஏக்களின் கோரிக்கை நியாயமானது’ - டி.கே. சிவகுமார் அதிரடி!

5 இலவச ஐபிஎல் டிக்கெட் கோரும் கர்நாடக எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கை நியாயமானது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கர்நாடக எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு 5 விஐபி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த் காஷப்பனவர் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் "விஐபி-க்கள்" என்றும், டிக்கெட் வாங்குவதற்காகப் பொதுமக்களைப் போல வரிசையில் நிற்க முடியாது என்றும் சட்டசபையில் தெரிவித்தனர்.

மேலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் எம்.எல்.ஏ-க்களை அவமதிப்பதாகவும், டிக்கெட்டுகளை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவை சபாநாயகர் யு.டி. காதர், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 விஐபி டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தினார்.

இதனை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா போன்றோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் இந்த கோரிக்கை நியாயமானதுதான் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசின் அங்கமாக அவர்கள் இருப்பதால், அதனை கோருவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படுவது குறித்து நான் நிர்வாகத்திடம் பேசுவேன். தேஜஸ்வி சூர்யா இதுபோன்ற அறிவுரைகளைத் தனது கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.