ஹோம்ஸ்டே மூலம் போதைப்பொருளைக் கொள்முதல் செய்து சில்லறை விநியோகம் செய்வதை ஒருங்கிணைத்த முக்கிய நபர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளம் மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் சிறப்பு படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மாநிலம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வயநாட்டில் உள்ள எடக்கல் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் பதுக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 104.22 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கல்பேட்டா அருகே உள்ள முட்டில், சிலாஞ்சிச்சல் பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்னுல் ஷாதுலி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், அந்த ஹோம்ஸ்டே மூலம் போதைப்பொருளைக் கொள்முதல் செய்து சில்லறை விநியோகம் செய்வதை ஒருங்கிணைத்த முக்கிய நபர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.