இந்தியா

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்:

கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT