காங்கிரஸ் போராட்டம்
இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: டெல்லியில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் பதற்றம்!

வாக்காளர்களை சேர்க்கும் வடிவம் 6 திருத்தி அமைக்கப்பட்டதை மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்கவில்லை எனத் தகவல்.

வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த பணியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தலைமை தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரண்டு ஆணையர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்தி வெளியானது. இதனால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

காங்கிரஸ் கட்சி இன்று டெல்லி, பாட்னா, ஜம்மு, கொல்கத்தா, பஞ்சாப், அசாம், அருணாச்சல பிரதேசம் என நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு ஞானேஷ் குமார் பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்களை தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், காங்கிரசார் தடுப்புகளை தாண்டி முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் அழிந்து போக விடமாட்டோம். இதில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவந்திர யாதவ் தெரிவித்தார்.

ஞானேஷ் குமார் முகமூடி அணிந்து போராட்டம்

முன்னதாக, இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஞானேஷ் குமார் முகமூடி அணிந்து, கையை கட்டியபடி போராட்டம் நடத்தினர். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கவுரவ் கோகாய் கைது

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிராக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களை பயன்படுத்தினர். கொல்கத்தா, சண்டிகர், ஜம்மு போன்ற முக்கியமான நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT