போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது எந்தவிதமான வன்முறையோ அல்லது காவல்துறையின் பலப்பிரயோகமோ மேற்கொள்ளப்படாது என்றும், அவர்கள் மீது எந்தவிதமான வழக்குகளோ (FIR) அல்லது தண்டனை நடவடிக்கைகளோ எடுக்கப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்தால், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தின் போது சுமார் 11 கிலோ எடை குறைந்திருந்தாலும், தான் மீண்டும் தனது பணிகளை தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட காணொளி செய்தியில், உடல்நலிவுற்ற நிலையில் காணப்பட்ட வாங்சுக் கூறும் போது: "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இது எனது உண்ணாவிரதத்தின் 25-வது நாள். நான் சுமார் 11 கிலோ எடையை இழந்துவிட்டேன்; தசை வலிமையும் குறைந்துள்ளது. ஆனால் நான் நலமாகவே இருக்கிறேன்."
"நான் எனது பணிகளை தொடங்க விரும்புகிறேன்; ஆனால் மாணவர்கள் மீது மீண்டும் வன்முறையை பிரயோகிக்கவோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளையோ அல்லது வழக்குகளையோ (FIR) பதிவு செய்யவோ வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான உறுதிமொழி எனக்கு தேவை. அந்த உறுதிமொழி கிடைத்தால், நான் இன்றே எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன். இல்லையெனில், அதை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்று அவர் கூறினார்.
'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஏற்பாடு செய்திருந்த 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் போது, திங்களன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாக வாங்சுக் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு பாராட்டு:
இது குறித்து பேசிய அவர், "அந்த தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்ததால், நான் உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்தேன். ஆத்திரமூட்டப்பட்ட நிலையிலும், கல்வீச்சு நடத்துவதற்காகவே சிலர் வரவழைக்கப்பட்டிருந்த போதிலும், காவல்துறையின் தடியடிக்கு ஆளானாலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தாத அனைத்து மாணவர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல அரசியல் தலைவர்கள், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு தன்னை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் வாங்சுக் குறிப்பிட்டதாவது: செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் தன்னைச் சந்தித்த அமைச்சர்கள், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்குவது குறித்தும், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்துவது (மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்தும் பரிசீலிப்பது உட்பட) குறித்தும் மத்திய அரசு சாதகமாகப் பரிசீலிக்கும் என்று உறுதியளித்தனர்.
மேலும், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதற்கான உறுதியையும் அவர் கோரினார்.
"நியாயமான மற்றும் பொறுப்புணர்வுள்ள கல்வி முறைக்காக தங்கள் குரலை எழுப்பியது மட்டுமே அவர்கள் செய்த 'குற்றம்' ஆகும்," என்று அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் வாங்சுக் குறிப்பிட்டார். அந்த கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துகொண்ட அவர், "எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... அரசிடமிருந்து உறுதிமொழி கிடைத்ததும், அமைதியான முறையில் போராடி வரும் மாணவர்களிடமும், தற்போதைக்கு இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நான் கேட்டுக்கொள்வேன்," என்று கூறினார்.