இந்தியா

4 மாநிலங்களில் இன்று SIR பணிகள் தொடக்கம்!

மொத்தம் 3.7 கோடி பேர் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் சரிபார்க்கப்பட உள்ளனர்.

பீகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் 2ஆம் கட்டமாக நடத்தப்பட்டது.

3ஆம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இந்நிலையில் 3ஆம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் ஒடிசா, மிசோரம், சிக்கிம் மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று (ஜூன் 1) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

ஜூன் 28 வரை இந்த பணிகள் நடைபெற்று, ஜூலை 5இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் 6இல் இந்த நான்கு மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ஒடிசாவில் மொத்தம் உள்ள 3.3 கோடி வாக்காளர்கள், மணிப்பூர் 20.9 லட்சம் வாக்காளர்கள், மிசோரம் மாநிலத்தில் 8.7 லட்சம் வாக்காளர்கள், சிக்கிம் மாநிலத்தில் 4.7 லட்சம் வாக்காளர்கள் என மொத்தம் 3.7 கோடி பேர் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் சரிபார்க்கப்பட உள்ளனர்.

இதில் மணிப்பூர் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் இந்த எஸ்ஐஆர் செயல்பாட்டில் பங்கேற்குமாறும், வீடு வீடாக வரும் தேர்தல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.