ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான விஸ்வநாத் ராவ், வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்று, 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திற்கு ரூ.19,694.33 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க முடியாது என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரிலையன்ஸ கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை மேலாண்மை பதவியில் விஸ்வநாத் ராவ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.
அவர் ஒரு மூத்த மேலாளராக, வரவு செலவு திட்டங்கள், மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் பணப்புழக்க அறிக்கைகளை தயாரித்தல், திட்டம் தொடர்பான செலவினங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வழக்கமான வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட வணிக மற்றும் வங்கி செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் அரசுக்கு சொந்தமான வங்கியை பல்வேறு கடன் வசதிகளை வழங்க தூண்டி, இறுதியில் ரூ.2,929.05 கோடி தவறான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி சிபிஐ-யிடம் பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 21, 2025 அன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திடம் இருந்து ரூ.19,694.33 கோடி கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஸ்வநாத் ராவை மத்திய புலனாய்வு பிரிவு கைது செய்தது.
இதற்கிடையில் ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “ராவ் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவோ, கருவூலம் அல்லது நிதிக் கொள்கை படிநிலையின் ஒரு பகுதியாகவோ இல்லாததால், நிதிகளை தன்னிச்சையாக அனுமதிக்கவோ, கட்டமைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அவருக்கு அதிகாரம் இல்லை.
மேலும், அவர் கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கடன் வாங்கும் உத்தியை வகுப்பதிலோ பங்கேற்கவில்லை என்றும், அவரால் பயன்படுத்தப்பட்ட கையொப்பமிடும் அதிகாரம் முற்றிலும் நடைமுறை சார்ந்தது மற்றும் செயல்பாட்டுத் தேவையிலிருந்து உருவானது” என்றும் ராவ் தனது ஜாமீன் மனுவில் கூறினார்.
இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்ததால், அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அங்கு, அவரது வழக்கறிஞர்களான பி.கே. சங்ராஜ்கா மற்றும் ஸ்ரீசங்கர் பிரஜாபதி ஆகியோர், 67 வயதான அவர் கட்டுப்படுத்த முடியாத வகை-2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய தமனி நோயால் அவதிப்படுவதாகவும், இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
ராவ் ஒரு ரூபாய் கூட பயனாளியாக இருக்கவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவானவை என்றும், குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 20 நபர்களில் மூன்று பேரை மட்டுமே சிபிஐ கைது செய்துள்ளது என்றும் ராவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் முண்டே, ஜாமீன் மனுவை எதிர்த்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட வங்கிப் பதிவுகள், தகவல் தொடர்புகள், பரிவர்த்தனைகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள், கடன் அனுமதி விதிமுறைகளை மீறி, கடன் நிதியைத் திசைதிருப்புவதாக கூறினார்.
மேலும் வசதியாக வடிவமைக்கப்பட்ட அடுக்குமுறை பரிவர்த்தனைகள், பில் தள்ளுபடி ஏற்பாடுகள் மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மூலம் நிதியை வழிப்படுத்துவதில் ராவ்-இன் நேரடி மற்றும் தீவிர ஈடுபாட்டை முதற்கட்டமான சுட்டிக்காட்டுகின்றன எனவும் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.
ராவ் பணிபுரிந்த ஆர் காம் நிறுவனம், நிதியைச் சுற்றி வளைத்து அனுப்பிய சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, ஜாமீன் மனுவை நிராகரிக்குமாறும் சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க மறுத்து, விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாலும், அவரை மேலும் காவலில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்பதாலும் ராவுக்கு பிணை (bail) வழங்கி உத்தரவிட்டார்.