Visakhapatnam SteelPlantAccident  
இந்தியா

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்துக்கு தரம் குறைந்த ரசாயனங்களே காரணம் - தொழிலாளர் சங்கங்கள் குற்றச்சாட்டு..

எஃகு ஆலைகளில் உருகிய இரும்பு, கரண்டிகளில் இருந்து கசியுமே தவிர, இப்படி வெடிக்காது என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் எட்டு தொழிலாளர்களின் உயிரைப் பறித்த கொடூர விபத்திற்கு, அங்கு பயன்பபடுத்தப்பட்ட தரம் குறைந்த ரசாயனங்களே காரணம் எனத் தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

பொதுவாக எஃகு ஆலைகளில் உருகிய இரும்பு, கரண்டிகளில் இருந்து கசியுமே தவிர, இப்படி வெடிக்காது என்று தொழிலாளர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரும்பு சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது பயன்படுத்தப்பட்ட மிக மோசமான தரம் கொண்ட ரசாயனங்கள், கடுமையான வேதிவினைக்கு உள்ளானதே இந்த வெடிப்பிற்கு காரணம் என தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 27 முறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் பெரிய விபத்துகளில் இருந்து தப்பித்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து மத்திய எஃகு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஃகு உருக்கும் பிரிவு-1-ல் உள்ள காஸ்டர்-2 பிரிவில் வார்ப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

உருக்கிய இரும்பை அடுத்த கட்ட வார்ப்புக்கு மாற்றுவதற்காக ஸ்லைடு கேட்டைத் திறப்பதற்கு முன்பாகவே, எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏற்பட்டடுள்ளது.

இதனால் எழுந்த பிரம்மாண்ட நெருப்புக் கோளம் கூரை வரை எழும்பியதில், அங்கிருந்த ஓவர்ஹெட் கிரேன்-2 தீப்பற்றி எரியத் தொடங்கியது.

வெடிப்பின் தாக்கத்தால் உருகிய இரும்பைத் தாங்கி நின்ற கிரேன் உடைந்து நொறுங்கியது. இதனால் சுமார் 1500 முதல் 1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதித்துக்கொண்டிருந்த திரவ இரும்பு மொத்தமாக தரையில் கொட்டியது.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது இரும்பு பாய்ந்ததில், இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.