இந்தியா

பஞ்சாபில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளா? வைரல் வீடியோவின் உண்மை சம்பவம் அம்பலம்!

1 லட்சம் லைக்குகளை குவித்த வீடியோ போலியானது - உண்மை சரிபார்ப்பில் தெரியவந்த தகவல்!

பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது.

மருத்துவமனையின் பிரசவ அறையிலிருந்து 6 செவிலியர்கள் தலா ஒரு குழந்தையை கைகளில் ஏந்தியபடி வெளியே வருவதும், பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் நெகிழ்ந்து போய் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முற்றிலும் போலியானது

சமூக வலைத்தளங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைக் குவித்துள்ள இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ பஞ்சாபில் எடுக்கப்பட்டது அல்ல.

இது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், வேறெங்கோ எடுக்கப்பட்ட வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்யப்பட்ட ஒரு போலித் தொகுப்பாகும்.

திட்டமிட்ட ஏமாற்று வேலை

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள், பார்வைகள் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காகச் செய்யப்படும் 'என்கேஜ்மென்ட் ஃபார்மிங்' என்ற ஏமாற்று உத்திதான் இது என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியில் கோமல் என்ற பெண் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறி, இதே போன்ற ஒரு ஏஐ புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்களின் சந்தேகங்கள்

இந்த வீடியோவைப் பார்த்த விழிப்புணர்வுள்ள சில பயனர்கள் இதன் உண்மைத்தன்மையைக் கேள்வி எழுப்பியுள்ளனர். "ஒரு குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும் பட்சத்தில், 6 குழந்தைகளை ஒரு பெண் தன் வயிற்றில் சுமக்க வேண்டும் என்றால், ரத்தம், எலும்பு, தசை என வயிற்றுப் பகுதியில் மட்டும் சுமார் 15 கிலோ எடையைச் சுமக்க வேண்டும்.

இது சாத்தியமா?" என்று அறிவியல் ரீதியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அந்த வீடியோவின் முகப்புப் படம் அப்பட்டமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது போலத் தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

உண்மையில் எங்கு நடந்தது?

இந்த வதந்தியானது சமீபத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஜீனத் வஹீத் என்ற பெண்மணிக்கு மிக அரிதான முறையில் 6 குழந்தைகள் பிறந்த நிஜச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பரப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிறந்த அந்த 6 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்தது.

இதேபோல், கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலும் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன.

மருத்துவ அறிவியலின்படி, ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். தற்காலத்தில் ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகள் மற்றும் மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இது போன்ற இரட்டை அல்லது பல குழந்தைகள் பிறக்கும் சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளன.

இருப்பினும், பஞ்சாபில் 6 குழந்தைகள் பிறந்ததாகக் கூறி வைரலாகும் இந்தத் குறிப்பிட்ட வீடியோ முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT