மேகாலயாவில் காசி மாணவர் சங்கம் (KSU) நடத்திய கருப்புக் கொடி இருசக்கர வாகன பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மாணவர் சங்கத்தை சேர்ந்த மூன்று மூத்த தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேகாலயா அரசுக்கு காசி மாணவர் சங்கம் விடுத்திருந்த 15 நாள் காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, ஷில்லாங் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி இருசக்கர வாகனப் பேரணியில் மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இந்த பேரணி ஜெயா பகுதியில் உள்ள கே.எஸ்.யு அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல பகுதிகளில் நடத்தப்பட்டது.
மாணவர் சங்கம் வைத்த கோரிக்கையில், “கிழக்கு ஜெயிண்டியா மலைப்பகுதியில் முன்மொழியப்பட்ட புதிய தனியார் சிமெண்ட் ஆலை திட்டத்திற்கான ஜூலை 31 பொது விசாரணையை ரத்து செய்ய வேண்டும் எனவும்,
அந்த விசாரணையை நடத்தியதற்கு பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் கிழக்கு ஜெயிண்டியா துணை ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மேகாலயா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பேரணி நடத்தப்பட்டது.
மேலும், மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் (MRSSA), 2016-ஐ அமல்படுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான திருத்தங்களை அமல்படுத்துதல், கிரேடு சி மற்றும் டி பதவிகளுக்கான நேர்காணல்களை நீக்குதல் உள்ளிட்ட அரசு பணி நியமன மாற்றங்கள் மற்றும் மேகாலாயாவில் வசிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு ஆகியவற்றையும் மாணவர் சங்கம் வலியுறுத்தியது.
இந்த பேரணியின் போது, வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதேவேளையில் போராட்டங்களுக்கு மத்தியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதையடுத்து KSU தலைவர் ரேமண்ட் கர்ஜனா, ரூபன் நஜியார் மற்றும் பிங்க்மென்லாங் சான்மியட் ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த கைது நடவடிக்கை குறித்து மாணவர் சங்கம் கூறுகையில், எதிர்மறை சக்திகளால் வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.