இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து - ஜூலை 1 முதல் VB G RAM G திட்டம் அமல்

ஆண்டுக்கு 125 நாட்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்கியும், விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்தும் மசோதா கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில் MGNREGA வுக்கு பதில் கொண்டுவரப்பட்ட விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத சட்டம் (VB G RAM G) வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே தேதியில் பழைய MGNREGA சட்டம் ரத்து செய்யப்படும்.

தற்போதுள்ள 100 நாட்களுக்குப் பதிலாக, புதிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு வேலை இல்லா உதவித்தொகை வழங்கப்படும்.

கூலிகள் நேரடியாகத் தொழிலாளர்களின் வங்கி அல்லது தபால் நிலையக் கணக்குகளுக்கு வாராந்திர அடிப்படையில் அல்லது 15 நாட்களுக்குள் மாற்றப்படும். காலதாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் இடமுண்டு.

ஜூன் 30 வரை MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என அரசு உறுதியளித்துள்ளது.

2026-27 நிதியாண்டிற்காக இந்தத் திட்டத்திற்கு 95,692.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பங்களிப்பையும் சேர்த்தால், ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு 1.51 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.