வறுமையை வெல்ல கணவனை இழந்த பெண் ஊர்க்காவல் படை உடற்தகுதி தேர்வில் வெறும்கால்களில் 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தின் துல்மி வட்டாரத்தில் உள்ள சோசோ கிராமத்தை சேர்ந்தவர் கவிதா குமாரி.
கணவனை இழந்த கவிதாவின் முன் 2 குழந்தைகள், மாமனார், மாமியாரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது.
வறுமைச் சூழல், குடும்ப பொறுப்புக்கு மத்தியில் கவிதாவுக்கு ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு செய்தி சரியான வாய்ப்பாக பட்டுள்ளது.
ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வில், புடவை அணிந்தபடி சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில் வெறுங்காலுடன் 1,600 மீட்டர் ஓடினார்.
வெறும் 6 நிமிடங்களில் இதை முடித்து கவிதா குமாரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பெண் போட்டியாளர்கள் 1,600 மீட்டர் தூரத்தைக் கடக்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரம் 10 நிமிடங்கள் ஆகும். 8 நிமிடங்கள் என்பது மிகச் சிறந்த மதிப்பெண்.
ஆனால், டிராக் சூட் அல்லது ஓடும் காலணிகள் அணியாமலும், தனது சேலையை மடித்துக்கொண்டும் ஓடிய கவிதா, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வெகு முன்பாகவே, 6 நிமிடங்களில் இலக்கை அடைந்தார்.
கவிதா புடவை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் ஓட்டப் பயிற்சி மையத்தின் அதிகாரிகள் சோசோ கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரைக் வாழ்த்தினர்.
விளையாட்டுக் காலணிகள் அல்லது டிராக்சூட்கள் வாங்க அவரிடம் பணம் இல்லாததால், கவிதா தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தான் தைத்த புடவையை அணிந்துகொண்டு சாலையில் பயிற்சி செய்து வந்தார்.
இந்தச் சாதனை மூலம், உடைகளோ சூழ்நிலைகளோ முக்கியமல்ல, இலக்கே முக்கியம் என்பதை கவிதா நிரூபித்துள்ளார்.