இந்தியா

செல்போனை திருப்பி கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவேன்.. தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்

ஆத்திரமடைந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான்.மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்ற உத்தரவு அனைத்து பள்ளிகளிலுமே அமலில் இருக்கிறது.

இதே போன்று தான் அனக்கரா அரசு பள்ளியிலும் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவன், பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்தபடி இருந்திருக்கிறான்.

இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனை செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவன், செல்போனை பள்ளிக்கு கொண்டுவந்து வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறான்.

சம்பவத்தன்றும் அந்த மாணவன் வகுப்பறையில் வைத்து செல்போனை பயன்படுத்தியிருக்கிறான். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார். ஆசிரியர் செல்போனை பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியரிடம் தகராறு செய்திருக்கிறான்.

பின்பு அந்த செல்போன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான். பின்பு தலைமை ஆசிரியரின் எதிரே இருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்துகொண்டு பேசினான்.

அப்போது தனது செல்போனை திருப்பி தந்து விடுமாறு தலைமை ஆசிரியரிடம் ஆக்ரோஷமாக சத்தமாக கேட்டான். மாணவனின் இந்த செயல்பாட்டை தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஆக்ரோஷமாக பேசிய மாணவரிடம் தலைமை ஆசிரியர் எதுவும் பேசவில்லை.

இருந்த போதிலும் அந்த மாணவன் ஆக்ரோஷம் பொங்கி பேசியபடியே இருந்தான். மேலும் தனது செல்போனை தந்து விடுமாறு கேட்டான். ஆனால் அதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், "எனது செல்போனை திரும்ப தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும் போது கொன்று விடுவேன்" என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டினான்.

பின்பு தலைமை ஆசிரியரின் அறையில் இருந்து வேகமாக வெளியேறினான். "கொன்று விடுவேன்" என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த போதிலும், மாணவனின் எதிர்காலம் கருதி அவன் மீது பள்ளி தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவனது ஒழுக்கக்கேடான செயலை பற்றி கூறினர்.

இந்தநிலையில் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று, அவரிடம் ஆவேசமாக பேசி மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்போன் பயன்பாடு ஒரு மாணவனை எந்த அளவுக்கு ஆக்ரோஷமடைய செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.