VIDEO 
இந்தியா

VIDEO: சட்டப்படி தத்தெடுக்கவில்லை என கூறி பெற்றோரிடம் இருந்து பிரித்த அதிகாரிகள்.. குழந்தை நடத்திய பாசப் போராட்டம் வைரல்

சட்டம் எவ்வாறு பலவீனமானவர்களுக்கு எதிராக வலுவாகவும், சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக பலவீனமாகவும் செயல்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தெலுங்கானாவில் 3 ஆண்டுகளாக வளர்த்த வளர்ப்பு தாய் - தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையின் பாசப் பிணைப்பை பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் சட்ட நடைமுறைகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் வண்ணம் நிகழ்வொன்று நடந்துள்ளது.

தெலுங்கானா ஜக்தியால் மாவட்டத்தில் குழந்தையற்ற ஒரு தம்பதி 3 ஆண்டுகள் முன் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குழந்தையும் அவர்கள் மீது பாசத்துடன் வளர்ந்தது.

பிரிவு

ஆனால் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்படவில்லை என கூறி, மூன்று ஆண்டுகளாக அவர்களின் பராமரிப்பில் இருந்த குழந்தையை அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து, அண்மையில் குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் குழந்தையை பிரிந்து வளர்ப்பு பெற்றோரும், பாசமுடன் வளர்த்த பெற்றோரை பிரிந்து குழந்தையும் வாடியுள்ளது.

உயர்நீதிமன்றம்

தம்பதியினர் இந்து பாரம்பரியப்படி குழந்தையைத் தத்தெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 16ஆம் தேதி குழந்தையை பெற்றோரிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், குழந்தையை ஒப்படைப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வைரல் வீடியோ

குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைப் பார்க்க பெற்றோர் சென்றபோது, ​​அக்குழந்தை, "அம்மா, என்னை இங்கிருந்து தூக்கிச் செல்லுங்கள்... எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கண்ணீருடன் கதறியது.

பின்னர், தந்தை குழந்தையை தூக்கி ஆறுதல் கூறினார். தன்னை விட்டுப் பிரிந்து செல்லக்கூடாது என்பதற்காக அக்குழந்தை தன் தந்தையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக ஊடகத்தில் வைரலாகி அரசு அதிகாரிகள் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் கண்ணீர்

இதுகுறித்து பேட்டியளித்த தாய், "இந்து பாரம்பரியப்படி குழந்தையைத் தத்தெடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் வளர்த்து வருகிறோம்.

இருப்பினும், யாரோ ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தையை குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, ​​குழந்தையை எங்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், குழந்தையை வளர்த்த தாய், அதிகாரிகள் குழந்தையைத் திருப்பிக் கொடுக்கவில்லை" என்று கூறி அழத் தொடங்கினார்.

வலுக்கும் கண்டனம்

"குழந்தையின் அழுகுரலைக் கேட்பதே வலிக்கிறது. மூன்று ஆண்டுகளாக அவனை அன்புடன் வளர்த்த பெற்றோரின் நிலையை நினைத்துப் பார்க்க முடிகிறது. நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், அதிகாரிகள் ஏன் குழந்தையைத் திருப்பித் தரவில்லை?" என வீடியோவை பார்த்த ஒரு எக்ஸ் பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'சட்டம் எவ்வாறு பலவீனமானவர்களுக்கு எதிராக வலுவாகவும், சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக பலவீனமாகவும் செயல்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் இந்த அமைப்பு, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளுக்கு செவிசாய்ப்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த வழக்கில் தலையிட்டு, குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்குமாறு ஜகித்யாலா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரையும், மாவட்ட ஆட்சியரையும் மக்கள் சமூக ஊடகங்களில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT