இந்தியா

VIDEO: பல்கலைக்கழக உணவுத் திருவிழாவில் வங்கதேச அரங்கை அடித்து நொறுக்கிய பாஜக இளைஞரணியினர்

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி (MIT-WPU) வளாகத்தில் நேற்று சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.

பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் உணவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் வங்கதேச மாணவர்கள் அமைத்திருந்த உணவு அரங்கின் மீது பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேச தேசியக் கொடியைப் பறித்து அதற்குத் தீ வைத்ததுடன், ஆக்ரோஷமான முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது. 

பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ் போகாலே கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநபர்கள் என்றும், அவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

SCROLL FOR NEXT