இந்தியா

கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் சக்தியாக திகழ்கிறார் பிரதமர் மோடி - துணை ஜனாதிபதி வாழ்த்து

நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி தற்கால பாரதத்தின் ‘யுக புருஷராக’ திகழ்கிறார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றுச் சாதனை

பாரதத்தின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீடுநடை போட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம், சமூக முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அரங்கில் பாரதத்தின் மிக உயரிய நிலை, பாரதத்தின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என அனைத்து துறைகளிலும் பாரதம் பீடுநடை போட்டு வருகிறது.

பாரதத்தின் செழுமையான கலாசார விழுமியங்களைப் போற்றுதல், மறைக்கட்ட வரலாற்று நாயகர்கள், விடுதலை வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்துதல், காலனித்துவ மனப்போக்கில் இருந்து விடுபடுதல் மற்றும் நமது பண்பாட்டு அடையாளங்களின் மீதான பிடிப்பை வலுப்படுத்துதல் என பாரதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

2047-ம் ஆண்டிற்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் திகழ்கிறது.

பாரதத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலக்கட்டத்தில், தனது தொலைநோக்குத் தலைமையாலும், அர்ப்பணிப்பு மிக்க அயராத உழைப்பாலும், நாட்டின் நலனே முதன்மை என்ற தணியாத வேட்கையாலும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி தற்கால பாரதத்தின் ‘யுக புருஷராக’ திகழ்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.