இந்தியா

இரண்டு முறை வந்தே மாதரம் தேவையற்றது: சசி தரூர்

சசி தரூரின் கருத்துகளுக்கு பாஜக தலைவர் அமித் மால்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1870-களில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம், 1950-ல் இந்தியாவின் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 1950 ஜனவரி 24 அன்று, இந்திய அரசியலமைப்பு வந்தே மாதரத்திற்கு தேசியப் பாடல் அந்தஸ்தை வழங்கியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பள்ளிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மன’-விற்கு முன்பே வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியது.

மேலும் 1937-ல் நீக்கப்பட்ட நான்கு பத்திகள் உட்பட, அப்பாடலின் ஆறு பத்திகளும் இனி இசைக்கப்படும் என்றும், தேசிய கீதம் இசைக்கப்படும்போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் கவன நிலையில் எழுந்து நிற்க வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரத்தின் ஐந்து சரணங்களையும் இசைப்பது தேவையற்றது மற்றும் சுமையானது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்போது அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் ஐந்து சரணங்களையும் பாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது ஒரு தேவையற்ற திணிப்பு என்று நான் நினைக்கிறேன்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அல்லது பிரதமர் சம்பந்தப்பட்ட விழா நிகழ்வுகளின்போது ஒருமுறை அதை பாடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் ஒரு குறுகிய நிகழ்ச்சியின்போது முழுப்பாடலையும் இரண்டு முறை பாடுவதைப் புரிந்துகொள்வது கடினம். அதற்கான நியாயம் எனக்குப் புரியவில்லை” என்று கூறினார்.

சசி தரூரின் இந்த கருத்துகளுக்கு பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா கடும் எதிர்வினையாற்றி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர்,

“உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளன. அலுவல் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப்படும் போதெல்லாம், அதன் முழுமையான அலுவல் பதிப்பு பாடப்பட வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட அரசு நிகழ்வுகளில் ஆறு பத்திகளும் இசைக்கப்பட வேண்டும். அது எந்தெந்த சந்தர்ப்பங்களில் பாடப்பட வேண்டும் மற்றும் கவன நிலையில் நிற்பது உட்பட பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளையும் அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன” என்று அமித் மால்வியா பதிவிட்டுள்ளார்.