இந்தியா

மும்பையில் 'வடபாவ்' விலை அதிரடி உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

மும்பை முழுவதும் உள்ள பேக்கரிகள் பாவ் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

மும்பையில் அண்மையில் அமுல் பால் விலை உயர்ந்தது. மேலும் ரொட்டி(பிரட்) விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரை அதிகரித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள், தற்போது மும்பை மக்களின் பிரதான உணவாக திகழும் 'வடபாவ்' விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட மதிய உணவாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் விளங்கும் வடபாவ், மிசல்பாவ் மற்றும் பாவ்பாஜி போன்ற உணவுகளுக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது 'பாவ்' ஆகும். இந்தநிலையில், மும்பை முழுவதும் உள்ள பேக்கரிகள் பாவ் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இதன்படி, இதுவரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 12 பாவ் கொண்ட ஒரு அடுக்கு (லாதி), தற்போது ஒரேயடியாக ரூ.10 விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு தனி பாவ் ரூ.3-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் விலை உயர்வால் தற்போது அதன் விலை ரூ.4 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து பேக்கரி உரிமையாளர் ஒருவர் கூறும்போது, "மூலப்பொருட்கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பால் பாவ் தயாரிக்கும் பேக்கரிகள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பாவ் விலையை உயர்த்துவதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

மறுபுறம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏற்கனவே திணறி வரும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மாத பட்ஜெட்டை இந்த விலை உயர்வு மேலும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது.

பால் விலை உயர்ந்துள்ளதால் சாலையோர கடைகள் மற்றும் துரித உணவகங்களில் வடபாவ் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.