இந்தியா

பள்ளி வளாகத்தில் ஆவிக்கு பயந்து கோவில் கட்டிய நிர்வாகம் - நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு

பள்ளி நிர்வாகத்திடம் நிதி சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் சமீபத்தில் கேள்வி எழுப்பிய போது கடும் சர்ச்சை ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தின் குமாவோன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கவுசானி கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் படித்து வரும் பல மாணவிகள் விவரிக்க முடியாத காரணங்களால் தொடர்ந்து மயங்கி விழுந்தனர். இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு அருகில் தவறி விழுந்து உயிரிழந்த, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் ஆவிதான் காரணம் என்று அந்தப்பகுதியில் வேகமாக தகவல் பரவியது.

இதையடுத்து அந்த பகுதியில் ஒரு சிறிய கோவிலை கட்ட முடிவு செய்தனர். மலைப்பகுதியில் உள்ள மக்களிடையே கடவுள்கள் மற்றும் ஆவிகள் இரண்டின் மீதும் நம்பிக்கை வலுவாக உள்ளது. ஆவி பயத்தைப் போக்குவதற்கான ஒரு வழியாக இந்தக் கோவில் பார்க்கப்பட்டது.

கடந்த ஜனவரியில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோவில் கட்டுமானத்தைத் தொடங்கியது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 218 மாணவர்களில் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.100 வசூலிக்கப்பட்டு, ரூ.21,800 திரட்டப்பட்டதாகவும், கோவில் கட்ட மொத்த செலவு சுமார் ரூ.25,000 என மதிப்பிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட இதற்கு நிதி அளித்தனர். இருப்பினும், பள்ளி நிர்வாகத்திடம் நிதி சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் சமீபத்தில் கேள்வி எழுப்பிய போது கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இந்த விவகாரம் கல்வித்துறையின் கவனத்திற்கு வந்த பிறகே பள்ளி வளாகத்தில் ஆவிக்கு பயந்து கோவில் கட்ட முடிவெடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.