உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரதாப்நகர் வட்டத்தில் தேவல் என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த கேதன் லால் என்ற 18 வயது தலித் இளைஞர், பக்கத்தில் உள்ள கோல்கர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் கடந்த ஆறு மாதங்களாக நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
தலித் சமூக இளைஞர் தங்கள் பெண்ணுடன் பழகுவதை பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் விரும்பவில்லை என தெரிகிறது.
அவர்கள் நட்புடன் மட்டுமே பழகுகின்றனர் என்று கூறியபோதும் சாதி வெறியால் மழுங்கிய அவர்களது மூளை அதை ஏற்க மறுத்துள்ளது.
இதனால் தங்கள் பெண்ணை மிரட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் கேதனுக்கு போன் செய்ய வைத்து அவனை தங்கள் கிராமத்திற்கு வரச் செய்துள்ளனர்.
கேதன் தனது நண்பன் திவாகர் திம்ரி உடன் கோல்கர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இருவரும் கோல்கர் கிராமத்திற்கு சென்றடைந்ததும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்து ஒரு அறைக்குள் பூட்டி, தடிகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
திங்கள்கிழமை, அதாவது நேற்று அதிகாலை, அந்தப் பெண்ணின் தந்தை , கேதனின் தந்தை தன்பால் லாலை போனில் அழைத்து, உங்கள் மகனின் நிலைமை மோசமாக உள்ளது, வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
தன்பால் லால் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, தனது மகன் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மகனை உடனடியாக அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி கேதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அவரது நண்பர் திவாகர் திம்ரி, மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்களும் கேதனின் குடும்பத்தினரும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி, மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றம் மற்றும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றத்தில் தொடர்புடைய யஷ்வீர் சிங் பன்வார் என்ற நபரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்