கடந்த ஜனவரி 26 அன்று உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது முஸ்லிம் முதியவரின் கடையில் புகுந்த இந்துத்துவா கும்பல் ஒன்றை அவரை மிரட்டியது. பக்கத்தில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வந்த தீபக் என்பவர் முதியவருக்கு ஆதரவாக அந்த குண்டர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது உன் பெயர் என்ன என அந்த குண்டர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு தீபக், என் பெயர் 'முகமது தீபக்' என கூறவே அந்த கும்பல் மலைத்துப்போய் நின்றது.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி தீபக் வெளிப்படுத்திய மனிதநேயத்திற்கு தையிரத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாராட்டுகள் குவிந்தன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரகாண்ட் சென்றிருந்தபோது தீபக்கை நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆனால் இந்த நிகழ்வின் பின் தீபக்கின் வாழ்வாதாராமான உடற்பயிற்சி கூடம் இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, தீபக் குமாருக்கு வலதுசாரி அமைப்புகளின் செயல்பாட்டாளர்களிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின.
ஜனவரி 31 அன்று அவர் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் திரண்ட போதிலும், போலீசார் சரியான நேரத்தில் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவத்திற்கு முன்பு தீபக்கின் ஜிம்மில் சுமார் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், இந்தச் சர்ச்சைக்குப் பிறகு வெறும் 15 பேர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.
சமூகப் புறக்கணிப்பு ஏற்பட்ட நிதி இழப்பால், தீபக் குமாரால் தனது ஜிம்மிற்கான மாதாந்திர வாடகையான 40,000 ரூபாயைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் போயுள்ளது.
இதனுடன், சொந்த வீடு கட்டுவதற்காக அவர் வாங்கியிருந்த கடன் இஎம்ஐ மற்றும் குழந்தைப் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக ஜிம் வாடகையை முறையாகச் செலுத்தத் தவறியதால், ஜிம் செயல்பட்டு வரும் கட்டடத்தின் உரிமையாளர் உடனடியாக அந்த இடத்தை காலி செய்யுமாறு தீபக்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
"ஒரு முஸ்லிம் வியாபாரிக்காக நான் குரல் கொடுத்ததே எனக்குப் பெரும் சாபமாக மாறிவிட்டது என்பதைப் போன்ற தொனியில் கட்டட உரிமையாளர் என்னிடம் பேசுகிறார்" என்று தீபக் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருபுறம், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர் நகலை ரத்து செய்யக் கோரி தீபக் குமார் கடந்த மார்ச் மாதத்தில் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "வழக்கின் விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற ஒத்துழைக்கும் வகையில், தீபக் சமூக வலைத்தளங்களில் எவ்விதப் வீடியோக்களையோ அல்லது கருத்துகளையோ பகிரக் கூடாது" என்று நிபந்தனை விதித்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
அநீதிக்கு எதிராக நின்ற ஒரு சாமானிய மனிதன் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.