ஒவைசியை உச்சநீதிமன்ற நீதிபதி என தவறாக நினைத்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் Guard of Honour மரியாதை செலுத்தினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்காக காத்திருந்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஏஐஎம்ஐஎம் நிறுவனர் அசாதுதீன் ஒவைசியைத் தவறுதலாக நீதிபதி என நினைத்து அவருக்கு மரியாதையை செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
காவல்துறையின் இந்தத் தவறு குறித்து விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இடப் பங்கீடு குறித்து தனது கூட்டணிக் கட்சியான ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒவைசி சஹாரன்பூர் சர்க்யூட் ஹவுஸுக்கு நேற்று சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.
ஓவைசி சர்க்யூட் ஹவுஸை அடைந்தபோது, அங்கு பணியில் இருந்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் அவருக்கு guard of honour மரியாதை செலுத்தினர்.
அதே நேரத்தில் அங்கு வரவிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மரியாதை செலுத்துவதற்காக காவல்துறையினர் காத்திருந்த நிலையில் ஓவைசியை நீதிபதி என நினைத்து அவருக்கு மரியாதை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
Guard of Honour என்பது சீருடை அணிந்த காவல்துறையினர் இரண்டு வரிசைகளில் நின்று சல்யூட் அடித்து கொடுக்கும் மரியாதை ஆகும்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒவைசி, "என்னை நிற்கச் சொன்னதால் நான் அங்கே நின்றேன்" என்றார்.
பின்னர் ஒவைசி, சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரசேகர் ஆசாத்தின் சொந்த ஊரான சுட்மல்பூருக்குச் சென்று, அவருடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ஒவைசியும் சந்திரசேகர் ஆசாத்தும் இணைந்து சமாஜ்வாதி பரிவர்த்தன் மோர்ச்சா என்ற கூட்டணியை அமைத்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.