உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பிளேஸ்கூல் ஆசிரியை ஒருவர் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் உள்ள அகதா பகுதியில் இயங்கி வரும் 'சீரீன் சோனி பிளேஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது சிறுவன் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பில் இருந்த சிறுவன், இயற்கை உபாதையைக் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்ததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து, அதில் கத்தியை பழுக்கக் காய்ச்சிய ஆசிரியை, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடனாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுவனைத் தாக்கி மிரட்டியும் உள்ளார்.
வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், வலியால் கதறி அழுது நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் உடலில் கொப்புளம் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதையடுத்து பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் மேலாளரிடம் புகார் தெரிவிக்க நேரில் சென்றபோது, அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாகச் செயல்படாமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பள்ளி நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்புடன் படிக்க வேண்டிய 5 வயதுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.