GovtFund Scam
இந்தியா

அரசு பள்ளி நிதியில் ரூ.2.66 கோடி சுருட்டல்! 4 ஆண்டுகளாக போக்கு காட்டிய பள்ளி முன்னாள் முதல்வர் அதிரடி கைது!

போலீசார் தன்னை தேடுவது தெரிந்தும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார் ஜீத்லால் படேல்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு ஆசிரமப் பள்ளி நிதியில், விதிகளை மீறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் பொறுப்பு முதல்வர் ஜீத்லால் படேலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

என்ன நடந்தது?

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 'ராஜ்கியா ஆசிரம பத்ததி' என்ற அரசு குடியிருப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில், இங்குள்ள 4 பள்ளிகளுக்கு அரசு வழங்கிய நிதியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசின் உள்துறை உத்தரவின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சாமர்த்தியமாக நடந்த ஊழல்:

விசாரணையில், சுர்வால் ஷஹ்னி கிளையின் பொறுப்பு முதல்வராக இருந்த ஜிதலால் படேல் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியது தெரிய வந்தது. அரசு விதிகளின்படி எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டுமானால் முறையான டெண்டர் மற்றும் கொட்டேஷன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆனால், இவர்கள் எந்த விதியையும் மதிக்காமல், தங்களுக்கு வேண்டிய தனியார் நபர்களிடம் இருந்து பள்ளிக்குத் தேவையற்ற பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ 2.66 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்து சுருட்டியுள்ளனர்.

போலீஸ் வலைவீச்சு & கைது:

இந்த மெகா ஊழல் தொடர்பாக 5 அரசு அதிகாரிகள் மற்றும் 12 தனியார் நபர்கள் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றுதல் (IPC Sections 409, 420, 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜீத்லால் படேல், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட லக்னோ பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 10 அன்று பிரயாக்ராஜின் சங்கர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.