உத்தரப் பிரதேசத்தில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 9 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்று 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் குலாரிஹா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 9 மாதக் குழந்தையும், குற்றம் சாட்டப்பட்ட 12 வயதுச் சிறுவனும் உறவினர்கள் ஆவர்.
சிறுவன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் சண்டிகரிலிருந்து கோரக்பூருக்கு வந்துள்ளான்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 2:00 மணியளவில், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை சிறுவன் ரகசியமாக கடத்திச் சென்றுள்ளான்.
அதிகாலையில் குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடிய போது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
மருத்துவப் பரிசோதனையில் குழந்தை மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
தற்போது குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த 12 வயதுச் சிறுவனை நேற்று (ஜூன் 21) பிடித்து விசாரணை நடத்தினர்.
தொடக்கத்தில் குற்றத்தை மறுத்த சிறுவன், போலீசாரின் தீவிர விசாரணையின் போது தனது செயலை ஒப்புக்கொண்டான்.
வெள்ளிக்கிழமை இரவு சிறுவன் மது அருந்தியதுடன், தனது கைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளான்.
அதன் பின்னரே சிறுமியை கடத்தி இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவனது கைபேசியை ஆய்வு செய்த போது, 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. சிறுவன் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கோரக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.