இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

3 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குரானா பகுதியில் பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தொழிலாளர்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் திடீரென கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, பாலத்தின் பிரம்மாண்ட கான்கிரீட் கட்டுமான பகுதி இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசாரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த 7 பேரில் ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன. 3 தொழிலாளர்கள் கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து வருகின்றன.