உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. வேறு சில கட்சிகளும் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகளை கேட்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தியது. அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:-
டெல்லியில் இன்று உத்தரபிரதேச தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலுக்கு இந்த தேர்தல் ஒரு புதிய திசையை காட்டும். அம்மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து உத்தரபிரதேச மக்களுக்கு ஒரு வலுவான மாற்றத்தை வழங்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.