இந்தியா

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நிறைவு: இந்தியாவின் நிலை என்ன?

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய, அமெரிக்காவின் அளித்த விலக்கு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையிலான போரின்போது ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைவித்தது. ரஷியாவிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா அந்த எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியது. இதனால் ரஷியா மானிய விலையுடன் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கி வந்தது.

இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவை டிரம்ப் வலியுறுத்தினார். அப்போது, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார். அதையும் மீறி இந்தியா எண்ணெய் வாங்கியது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

பின்னர், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்வோம் என்று இந்தியா தெரிவித்தது.

இந்த நிலையில்தான் வளைகுடா நாடுகளில் (மேற்கு ஆசியா) பதற்றம் நிலவியது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த, ஈரான் வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா விலக்கி அளித்தது. இருந்தபோதிலும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில்தான் நேற்றுடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. வளைகுடா பிரச்சினையும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளிக்குமா? என்பது தெரியவில்லை. அவ்வாறு விலக்கு அளிக்கவில்லை என்றால் அமெரிக்காவை எதிர்த்து ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யுமா? என்று தெரியவில்லை.

ஒருவேளை ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தினால், பெரும் தட்டுப்பாட்டு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.