இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மைக்ரோசாப்ட் நிர்வாகி ஆஷா ஷர்மா மற்றும் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி ஆகியோர்கள் பணவியல் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்காக அமெரிக்க மத்திய வங்கியால் அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், தகவல் தொடர்பு, இருப்பு நிலைக் கொள்கை, தரவு, உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் பணவியல் கொள்கைகளை ஆய்வு செய்ய ஐந்து பணிக்குழுகளை அறிவித்தார்.
இந்த குழுக்கள் ஃபெடரல் திறந்த சந்தை குழுவிற்கு பரிந்துரைகளை வழங்கும் என ஃபெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் கரேன் டைனன் மற்றும் முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் ஜெர்மி ஸ்டெய்ன் ஆகியோருடன் ரகுராம் ராஜன் இருப்புநிலை கொள்கை பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, டக் மெக்மில்லன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் கெவின் மர்பி ஆகியோருடன் தரவுப் பணிக்குழுவில் நியமிக்கபட்டார்.
இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், எக்ஸ்பாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷா ஷர்மா, மார்க் ஆண்ட்ரீசன் மற்று ஸ்டான்போர்ட் பொருளாதார நிபுணர் சார்லஸ் ஐ ஜோன்ஸ் ஆகியோருடன் உற்பத்தித்திறன் மற்றும் வேலைவாய்ப்புப் பணிக்குழுவில் பணியமர்த்தப்பட்டார்.
இதுகுறித்து ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் கூறுகையில், “ஒரு நிறுவனமாக நமது செயல்திறனை மெருகேற்றுவதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நமது நோக்கங்களை அடைவதற்கு ஃபெட் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.