இந்தியா

யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!

புத்தர் தனது சீடர்களுக்கு முதல் போதனை வழங்கிய இடம் இந்த சாரநாத் எனக் கூறப்படுகிறது.

யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில், இந்தியாவின் பழமையான பௌத்த தலமான, உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் இணையும் இந்தியாவின் 45வது தலம் இதுவாகும்.

புத்தரின் முதல் போதனை தலம்

கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தலத்தில்தான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாகவும், அவரது ஆரம்பகால சீடர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

புத்தராலேயே நான்கு முக்கிய பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சாரநாத், அரச குடும்பத்தினர், மடாலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஏராளமான தூபிகள், கோயில்கள் மற்றும் விகாரங்கள் கட்டப்பட்டன.

ஒரு முக்கிய பௌத்த மையமாக செழித்தோங்கிய சாரநாத், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து, 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டறியப்படும் வரை மறைந்து கிடந்தது.

இன்று இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இத்தலம், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கான யாத்திரை தலமாகவும் விளங்குகிறது.

மத்திய அரசின் பரிந்துரை

"2025-26 ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரியக் குழுவின் பரிந்துரையில், 'சாரநாத், பழமையான பௌத்த தளம்' என்ற தலைப்பிலான ஆவணக் கோப்பை யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளதாக, 2025 ஆகஸ்டில் மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.