வர்த்தக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.
2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.
இந்நிலையில், வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.
ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.
தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.