இந்திய ரயில்வே பயணச்சீட்டு ரத்து மற்றும் முன்பதிவு நடைமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து ரீஃபண்ட் தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டண தொகை எதுவும் திருப்பி தரப்படாது. 8 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% தொகை தொகை திரும்ப அளிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், டிக்கெட் விலையில் 25% கட்டணம் கழிக்கப்படும். 72 மணி நேரத்திற்கும் முன்னதாக, அதாவது மூன்று நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்படும் பட்சத்தில், முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.
மேலும் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதில் இருந்த இடக் கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நீக்கியுள்ளது. பழையவிதிப்படி பயணச்சீட்டை ரத்து செய்ய குறிப்பிட்ட நிலையத்திற்குச் செல்ல வேண்டும். தற்போது பயணிகள் எந்த ஒரு ரயில் நிலைய கவுண்டரிலும் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம்.
மின்னணு பயணச்சீட்டுகளைப் பொறுத்தவரை, முன்புபோல் இல்லாமல் தற்போது ரத்து செய்யும்பட்சத்தில் ரீஃபண்ட் தொகை தானாகவே உங்கள் கணக்கிற்குத் திரும்ப அளிக்கப்படும்.
ஏறும் இடத்தை மாற்றுதல்
பயணிகள் இப்போது, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை தாங்கள் ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு, பயணப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு மட்டுமே ஏறும் நிலையத்தை மாற்ற அனுமதிக்கப்பட்டது.
பயண வகுப்பு மாற்றம்
மேலும் கவுண்டர் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை தங்கள் பயண வகுப்பை உயர் வகுப்பிற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு முன்பு, சார்ட் தயாரிப்பதற்கு முன்னதாக மட்டுமே பயணிகள் தங்கள் பயண வகுப்பை மாற்றிக்கொள்ள முடியும்.
இதன் மூலம் கடைசி நேரத்தில் காலியாக உள்ள உயர் வகுப்பு இருக்கைகளை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15-க்குள் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.