உ.பி. அமைச்சர் ராகேஷ் ரதோர்
இந்தியா

கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்

உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை விடுதலை செய்யக்கோரி பாஜக அமைச்சர் கண்ணீர் சிந்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாஜக தொண்டர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்தவர்களை சந்திப்பதற்காக உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் சிந்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் ரதோர் குரு கூறியதாவது:-

ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்படுவது என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை. உள்ளூர் ரவுடியாக திகழும் முஜிப் அகமது மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், அவரது கைது செய்யப்பட்டு, அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை.

எஸ்.பி. உள்பட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். நீண்ட நேரம் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் உத்தரவாதம் தந்தார்கள் தவிர, ரிலீஸ் செய்யவில்லை. வாக்குவாதத்தின்போது ஏதாவது தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால், அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இளம் வயதினர் சில சமயங்களில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறலாம்; எனவே, நிர்வாகம் உணர்வுப்பூர்வமாகவும் கனிவுடனும் செயல்பட வேண்டும்.

எனது தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தொண்டர்கள் இல்லையென்றால், பிறகு பாஜக எங்கே இருக்கும்?

இவ்வாறு அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT