இந்தியா

திருமணமான பெண்ணை கொன்று தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு

கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராசில் உள்ள நக்லா பூரா கிராமத்தில், 24 வயது பெண் ஒருவரை நபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரியங்கா என்பவர் தனது கணவர் விபின் குமார் மற்றும் ஒன்றரை வயது மகளுடன் அந்த கிராமத்தில் வசித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (26) என்பவர் பிரியங்காவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மாலையில் விபின் குமார் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பலமுறை கதவைத் தட்டிய பிறகு அவரது மகள் கதவை திறந்தபோது, ​​தனது மனைவி தரையில் இறந்து கிடப்பதையும், பிரகாஷ் தூக்கில் தொங்குவதையும் குமார் கண்டார். இந்த செய்தி பரவியதும் ஏராளமான கிராம மக்கள் அந்த வீட்டில் கூடினர்.

இதுகுறித்து சர்க்கிள் அதிகாரி ஹிமான்ஷு மாத்தூர் கூறுகையில், "ஒரு பெண்ணின் உடல் தரையில் கிடப்பதும், ஒரு வாலிபர் தூக்கில் தொங்குவதும் கண்டறியப்பட்டது. அந்த நபர் முதலில் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று தெரிவித்தார்.

தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டு, இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மாத்தூர் மேலும் கூறினார்.