உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிவானி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், கடந்த மே 18 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மேலும், தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்துகொண்டனர்.
இதனிடையே ஷிவானியை காணவில்லை என்றும், லலித் வர்மா அவரைத் கடத்திச் சென்றுவிட்டதாகவும் ஷிவானியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இருவரும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களை கைது செய்து அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாக கூறி தங்கள் திருமண ஆவணங்களை காட்டியுள்ளனர்.
அப்போது, இருதரப்பு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஷிவானியின் பெற்றோர், லலித்தை மறந்துவிட்டு தங்களுடன் வீட்டிற்கு வந்துவிடுமாறு ஷிவானிக்குக் அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால், ஷிவானி கணவர் லலித்துடன் மட்டுமே வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டார்.
இதனால் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஷிவானியின் தாய் ரன்னோ, ஷிவானியைப் பின்னால் இருந்து இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
அடுத்த நொடியே, ஷிவானியின் தந்தை மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, போலீசார் கண்முன்னே ஷிவானியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார்.
போலீசார் சுதாரிப்பதற்குள் ஷிவானி இரத்த வெள்ளத்தில் சரிந்தார். பலத்த காயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷிவானி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஷிவானியின் தந்தை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் பெற்றோர் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்தும், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.