இந்தியா

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மோடியின் பெயர் சூட்ட உ.பி. அமைச்சரவை ஒப்புதல்!

முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு இந்தாண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ஜெவார் பகுதியில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா-ஜெவார்’ எனப் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

“நொய்டா சர்வதேச விமான நிலையத்தை மாநிலத்திற்குப் பரிசாக வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதற்கு நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா-ஜெவார் எனப் பெயரிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,” என்று முதலமைச்சர் கூறினார்.

மேலும், இந்த விமான நிலையம் உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், நாட்டின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாகவும் உருவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நொய்டா சர்வதேச விமான நிலையம்

கடந்த 2021ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இந்தாண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடியால் நொய்டா சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. லக்னோவிலிருந்து வந்த இண்டிகோ விமானம் ஜூன் 15 அன்று இங்கு முதன்முதலில் தரையிறங்கியது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஏஜி-யின் துணை நிறுவனமான யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் நொய்டா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து இதன் கட்டுமானத்தை மேற்கொண்டன.

SCROLL FOR NEXT