இந்தியா

உன்னாவ் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு - பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு அதிர்ச்சி தந்த உச்சநீதிமன்றம்

போலீஸ் புகாரை ஏற்க மறுப்பதாக கூறி அப்பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார்.

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2017 இல் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் எம்.எல்.ஏவாக குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

ஆனால் போலீஸ் புகாரை ஏற்க மறுப்பதாக கூறி அப்பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார்.

இதன்பின்னர் இந்த சம்பவம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. பல்வேறு அழுத்தங்களுக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் சிறுமியின் தந்தை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் போலீஸ் காவலில் உயிரிழந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது வழக்கறிஞரும் காரில் சென்ற போது, ஒரு லாரி அவர்கள் மீது மோதியது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிறுமியும், அவரது வழக்கறிஞரும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

டெல்லி நீதிமன்றம் குல்தீப் சிங் செங்காருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தி தீர்ப்பளித்தது. மேலும் சிறுமியின் தந்தை காவலில் மரணமடைந்த வழக்கில் செங்காருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 23 அன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், செங்கர் ஏற்கனவே ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்ததால், அவரது மேல்முறையீட்டு விசாரணை நிலுவையில் இருக்கும் வரை, அவரது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.

மேலும், அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த முடிவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த மேல்முறையீடு மனு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் "இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்குள் டெல்லி உயர் நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டனர்.