இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் (1857) முதன்மை நாயகியும், பெண் ஆற்றலின் அடையாளமுமான ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரவணக்க நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்து, போர்க்களத்திலேயே தனது உயிரைத் தியாகம் செய்த பாரதத்தின் வீரப்புதல்விக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
வாரணாசியில் 'மணிகர்ணிகா' (மனு) என்ற பெயரில் பிறந்த இவர், சிறு வயது முதலே குதிரை ஏற்றம், வாள்வீச்சு மற்றும் வில்வித்தை போன்ற தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார். ஜான்சி மன்னர் கங்காதர் ராவைத் திருமணம் செய்த பிறகு 'லட்சுமி பாய்' என்று அழைக்கப்பட்டார்.
மன்னரின் மறைவுக்குப் பிறகு, லட்சுமி பாயின் தத்தெடுக்கப்பட்ட மகனை ஜான்சியின் வாரிசாக ஏற்றுக்கொள்ள ஆங்கிலேய அரசு மறுத்தது. மேலும், ஜான்சி ராஜ்ஜியத்தை பிரிட்டிஷ் பேரரசுடன் இணைக்க முயன்றபோது, "என் ஜான்சியை நான் தரமாட்டேன்" என்று முழங்கி ஆங்கிலேயருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.
1858-ம் ஆண்டு மார்ச் மாதம் சர் ஹியூ ரோஸ் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டன. தனது வளர்ப்பு மகனை முதுகில் கட்டிக்கொண்டு, குதிரை மீது பாய்ந்து ஆங்கிலேயப் படைகளைச் சிதறடித்தார். பின்னர் குவாலியரில் உள்ள கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
1858 ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குவாலியர் அருகே உள்ள கோட்டா-கி-செராய் பகுதியில் ஆண் வேடமணிந்து பிரிட்டிஷ் ராணுவத்துடன் லட்சுமி பாய் தீவிரமாகப் போரிட்டார். போர்க்களத்தில் படுகாயமடைந்த அவர், ஜூன் 18 அன்று தனது 29-வது வயதில் வீரமரணமடைந்தார். தனது உடல் ஆங்கிலேயர்கள் கையில் கிடைக்கக் கூடாது என்ற அவரது கடைசி விருப்பத்தின்படி, அங்கிருந்த துறவிகளால் அவரது உடல் உடனடியாகத் தகனம் செய்யப்பட்டது.
அமைச்சர் கிஷன் ரெட்டி ஜான்சி ராணிக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக தனது சமூகவலைதள பக்கத்தில்,
"பாரதத்தின் மிகச்சிறந்த வீரப்புதல்விகளில் ஒருவரான ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரமரண நாளில், அவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது, அவரது இணையற்ற துணிச்சல், அடக்க முடியாத வீரம் மற்றும் தாய்நாட்டின் மீதான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் மாபெரும் அடையாளமாக மாறின. ராணி லட்சுமி பாயின் தியாகம், நாட்டை தைரியத்துடனும், கண்ணியத்துடனும், தேசபக்தியுடனும் சேவிக்க எதிர்கால தலைமுறையினருக்கு இன்றும் என்றும் ஊக்கமளித்து வருகிறது. அவரது மறக்க முடியாத வீரத்தின் மரபு, பாரத நாட்டின் வரலாற்றில் என்றென்றும் அழியாத முத்திரையாக நிலைத்திருக்கும்." என பதிவிட்டுள்ளார்.