இந்தியா

சென்னை-டெல்லி உள்பட 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாக மாறுகிறது: மத்திய மந்திரி தகவல்

நிலக்கரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மும்பை-கொல்கத்தா, டெல்லி-கவுகாத்தி ஆகிய முக்கிய குறுக்கு வழித்த உங்களை 4 வழிப்பாதைகளாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாக மாறுவதாகவும், இதன் மூலம் கூடுதலாக 1000 ரெயில்கள் இயக்க உள்ளதாகவும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.

இந்திய ரெயில்வே

இந்திய ரெயில்வே, நாட்டின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தின் உயிர்நாடியாகவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முதன்மை உந்துசக்தியாகவும் விளங்கி வருகிறது.

நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களையும், லட்சக்கணக்கான டன் சரக்குகளையும் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் இந்த மாபெரும் பொதுத்துறை நிறுவனம், இந்தியாவின் சமூக-பொருளாதார கட்டமைப்பை ஒன்றிணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இந்திய ரெயில்வேத்துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரெயில் வழித்தடங்களில் 4 வழிப்பாதை

இந்தியாவில் நிலக்கரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலை நிரந்தரமாகத் தீர்க்கவும், ரெயில்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய ரெயில் வழித்தடங்களை 4 வழிப்பாதைகளாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"தற்போது ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் நிலவுகிறது. நிலக்கரி மற்றும் பிற சரக்குகளின் போக்குவரத்து உச்சத்தில் உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, கடந்த 10 ஆண்டுகளில் 36 ஆயிரம் கி.மீ. கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாதைகளை உருவாக்குவதும், ரெயில்வேயின் கொள்ளளவை அதிகரிப்பதும் மிக அவசியமாகும். தொடர்ந்து புதிய பாதைகளை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்" என்றார்.

புதிதாக ஆயிரம் ரெயில்கள்

மேலும் அவர், "டெல்லி, கொல்கத்தா. சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கரச் சாலை வழித்தடங்கள் மற்றும் டெல்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா, டெல்லி-கவுகாத்தி ஆகிய முக்கிய குறுக்கு வழித்த உங்களை 4 வழிப்பாதைகளாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் புதிய திட்டங்களுக்கு அவ்வப்போது ஒப்புதல் அளித்து வருகிறார். இந்த 4 வழிப்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு. கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்களை இயக்க முடியும். இது பயணிகளின் காத்திருப்புப் பட்டியல் மற்றும் முன்பதிவு தொடர்பான சிக்கல்களைக் கணிசமாகக் குறைக்கும், ரெயில்வேயின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதே எங்களின் தொடர் முயற்சியாகும்" என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT