நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்திய ரெயில்வேயில் 7 ரெயில் வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் மொத்த ரெயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை 4 ரெயில் பாதைகளாக விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறம்பட கையாளும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுகுறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-
டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை, சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – சென்னை, மும்பை – ஹவுரா மற்றும் டெல்லி – கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 ரெயில் பாதைகளாக மாற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை ஊக்குவிக்கப்படும்.
இந்த முக்கிய வழித்தடங்களை 4 பாதைகளாக விரிவுபடுத்துவது, எதிர்கால பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் திறனை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். அதிக திறன், குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தூய்மையான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டு இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரெயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.