இந்தியா

ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய போன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.

மத்திய அமைச்சரவை ரூ.62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மொபைல் உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகள் இத்திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 வரையிலான 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.

முன்பு அமலில் இருந்த பி.எல்.ஐ திட்டத்தின் தொடர்ச்சியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தில், ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைபேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு தகுதியான விற்பனை மதிப்பின் அடிப்படையில் 2.25% முதல் 5% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மொபைல் போனுக்கான முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக 1.5% வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

சொந்தமாக இந்திய மொபைல் பிராண்டுகளை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேம்படுத்தவும் கூடுதலாக 3% ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை கணிசமாக உயர்த்தி, இந்தியாவின் உலகளாவிய மின்னணு விநியோகச் சங்கிலியை இது பலப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்தியா தற்போது உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் நாட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் கிட்டத்தட்ட 99.2% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.